வாழ்க்கையில் வெற்றி பெற மனத் தயாரிப்பு முக்கியம்: இறையன்பு பேச்சு
அன்னுார்: வெற்றி பெற மன தயாரிப்பு முக்கியம் என அன்னூர் அரசு பள்ளியில் நடந்த விழாவில், முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு பேசினார்.அன்னூரில் அமரர் முத்துக் கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி 73 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பால், ஸ்மார்ட் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக்கூடம், நூலக கட்டடம், மின் விளக்கு, மேஜைகள், கண்காணிப்பு கேமரா என இரண்டு கோடி ரூபாய்க்கு பணிகள் செய்யப்பட்டு உள்ளன. இவற்றை அர்ப்பணிக்கும் விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது.தலைமை ஆசிரியை சித்ரா வரவேற்றார். பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார்.கோவை மாவட்ட கல்வி அலுவலர் ஜெயசங்கர் முன்னிலை வகித்தார். உண்ணாமலை மற்றும் ராஜேஸ்வரி அறக்கட்டளை தலைவர் கார்த்திகேயன், முன்னாள் மாணவர்கள் சார்பில் இறையன்புவை கவுரவித்தார்.முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு பேசியதாவது : மாணவர்கள் நோக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். வெற்றி பெறுவதற்கு மனத் தயாரிப்பு முக்கியம். பல மாணவர்கள் மொபைலுக்கு அடிமையாகி விட்டனர். ஒரு மணி நேரம் மொபைலை பார்க்க விட்டால் பித்து பிடித்தது போல் ஆகிவிடுகின்றனர்.தொடர்ந்து ஐந்து நாட்கள் துாங்காமல் நாகப்பட்டினத்தில் சட்டம் ஒழுங்கு பணியில் ஈடுபட்டு இருக்கிறேன். பணி இல்லாமலும் இருந்திருக்கிறேன். அனைத்து சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும்படி கற்றுக் கொண்டிருக்கிறேன்.வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொள்ள வேண்டும். தற்போது மாணவர்கள் பள்ளி முடிந்த பிறகு சிறையில் இருந்து செல்வது போல் தப்பி செல்கின்றனர். பள்ளிக்கூடங்கள் மகிழ்ச்சிகரமானதாக மாற வேண்டும். பாட புத்தகம் மட்டும் படித்தால் போதாது. பல்வேறு திறன்களை பெற முடியாது. கதை, அறிவியல், வரலாறு ஆகியவற்றையும் படிக்க வேண்டும். படித்தது குறித்து சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோமசுந்தரம், பொருளாளர் நாராயணசாமி, உதவி தலைவர் கார்த்திகேயன் உள்பட 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இப்பள்ளியில் படித்து பொறியியல் மற்றும் மருத்துவ பட்டப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த 10 பேர் கவுரவிக்கப்பட்டனர். ரங்கநாதன் எழுதிய வெற்றி விலாசம் என்னும் புத்தகம் வெளியிடப்பட்டது.