சிதைந்த மாணவர் முகத்தை மீட்ட மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவர்கள்
மதுரை: நண்பர்களால் தாக்கப்பட்ட கல்லுாரி மாணவரை காப்பாற்றிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர்கள், மாணவரின் முகத்தோற்றத்தை ஆப்பரேஷன் மூலம் மீட்டெடுத்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த 17 வயது மாணவர், முன் விரோதத்தில் நண்பர்கள் தாக்கியதில் காயமடைந்தார். கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்களுடன், முகம் சிதிலமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிக ரத்த இழப்பு, சுவாசிப்பதில் தடை ஏற்பட்டதால் உறுப்புகள் செயலிழக்கும் நிலை ஏற்பட்டது. அவரை மருத்துவ நிபுணர்கள், 8 மணி நேரம் ஆப்பரேஷன் செய்து காப்பாற்றினர். அவனது சிதைந்த முகத்தை சரிசெய்து மீட்டனர்.டாக்டர் நாகேஸ்வரன் கூறியதாவது: நோயாளி மருத்துவமனைக்கு வந்ததும் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். முகம், கழுத்தில் தையல் போட்டு ரத்தம் வெளியேறுவதை நிறுத்தினோம். கழுத்துப் பகுதியில் குழாய் சொருகி, மாற்றுப் பாதையில் சுவாசிக்கும்படி செய்தோம் என்றார்.டாக்டர் பினிட்டா ஜெனா கூறியதாவது: சதை அடுக்குகளில் காயத்திற்கு மிகத் துல்லியமான சிகிச்சை அளிக்கப்பட்டது. முகத் தோற்றத்தை மீட்க நவீன ஒப்பனை சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்தவர், ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இயல்பான வாழ்கை வாழ்கிறார் என்றார். டாக்டர்கள் ஜிப்ரீல் ஒய்சுல், கண்ணன் உடனிருந்தனர்.