போலீசுடன் இன்போசிஸ் ஒப்பந்தம் சைபர் குற்றங்கள் தடுக்க நடவடிக்கை
பெங்களூரு: அதிகரித்து வரும் சைபர் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், போலீசுடன் இன்போசிஸ் அறக்கட்டளை ஒப்பந்தம் செய்துள்ளது.தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு போட்டியாக, சைபர் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. முகநுால், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், இ - மெயில் என, சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களை ஏமாற்றுகின்றனர். அந்த சைபர் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது பெரும் சிரமமாக உள்ளது. போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில், பெங்களூரு சி.ஐ.டி., போலீஸ், இந்திய தரவு பாதுகாப்பு கவுன்சில், சைபர் குற்ற விசாரணை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்துடன், இன்போசிஸ் அறக்கட்டளை சமீபத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.இதற்காக, கர்நாடக போலீசுக்கு, இன்போசிஸ் அறக்கட்டளை சார்பில், 33 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, தடயவியல் ஆய்வு, சைபர் குற்றங்கள் தடுப்பது மற்றும் விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இன்போசிஸ் அறக்கட்டளை டிரஸ்டி சுனில்குமார் தாரேஸ்வர் கூறுகையில், சைபர் குற்றங்களை தடுப்பதில், போலீசின் பணி மகிழ்ச்சி அளிக்கிறது. புதிய ஒப்பந்தம் மூலம், சைபர் குற்றப்பிரிவு போலீசின் திறன் மேம்பட உதவும். டிஜிட்டல் பாதுகாப்பில் புதிய படி எடுத்து வைத்துள்ளோம் என்றார்.