குறுமைய போட்டிக்கு முன்கூட்டியே நிதி கொடுங்க! உடற்கல்வி ஆசிரியர்கள் வலியுறுத்தல்
பொள்ளாச்சி: குறுமைய போட்டியை நடத்துவதற்கான தொகையை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே விடுவிக்க வேண்டும் என, உடற்கல்வி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பள்ளி கல்வித்துறை வாயிலாக, குடியரசு தினவிழா மற்றும் பாரதியார் பிறந்த தினவிழா விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. குறுமைய போட்டியைத் தொடர்ந்து, மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்படுகிறது.தடகளம், குழு மற்றும் தனிநபர் என, 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளின் கீழ் இப்போட்டியானது நடத்தப்படுவதால், அனைத்து மாணவ, மாணவியரும் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர்.குறு மைய அளவில் போட்டி நடத்துவதற்கு, ஏதேனும் ஒரு பள்ளியைத் தேர்வு செய்து, 92 ஆயிரம் முதல் 98 ஆயிரம் ரூபாய் வரை நிதி அளிக்கப்படுகிறது. ஆனால், இத்தொகை, கல்வியாண்டின் இறுதியில் மட்டுமே வழங்கப்படுவதால், அரசு பள்ளிகள் நிராகரிக்கப்படுகின்றன. அதற்கு மாற்றாக தனியார் மெட்ரிக் பள்ளி வாயிலாக போட்டியை நடத்த திட்டமிடப்படுகிறது.உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக, விளையாட்டு போட்டி நடத்துவதாக இருந்தால், அதற்கான தொகை ஒரு மாதம் முன்னரே விடுவிக்கப்படும். ஆனால், பள்ளிக் கல்வித்துறை வாயிலாக போட்டி நடத்தப்பட்டால், அதற்கான தொகை முன் கூட்டியே விடுவிப்பதில்லை.இதனால், குறு மைய போட்டிகளை நடத்த அரசு பள்ளித் தலைமையாசிரியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. சொந்த செலவில் போட்டியை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால், தவிர்த்து விடுகின்றனர். எனவே, போட்டி நடத்துவதற்கான தொகையை, முன் கூட்டியே வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.