சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர்களுக்கு கற்பித்தல் திறன் மேம்பாட்டு பயிற்சி
கோவை: சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்களிடம் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் பயிற்சி பட்டறை நேஷனல் மாடல் பள்ளியில் இன்றும், நாளையும் நடக்கிறது.பீளமேடு, நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் கீதா கூறியதாவது:மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) மற்றும் செயலக பயிற்சி மற்றும் மேலாண்மை நிறுவனம்(ஐ.எஸ்.டி.எம்.,) சார்பில் சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்களிடம் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் பயிற்சி பட்டறைகள் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.அந்த வகையில், தமிழகத்தில் டிரெயினிங் ஆப் டிரெயினர்ஸ்(டி.ஓ.டி.,) பயிற்சி பட்டறை சென்னையில் முதலாவதாக நடத்தப்பட்டது. இரண்டாவதாக கோவை பீளமேடு நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாளையும்(இன்று), நாளை மறுதினமும்(நாளை) பயிற்சி பட்டறை இடம்பெறுகிறது.இதில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் தொழில்நுட்பம், பயிற்றுவிப்பு முறை, பயிற்றுவிப்பு உபகரணங்கள் குறித்து நிபுணர்கள் பயிற்சி வழங்கவுள்ளனர். இது மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த மிகவும் உதவியாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.