உள்ளூர் செய்திகள்

தினமலர் பாராட்டி கட்டுரை வெளியிட்ட மதுரை ஆசிரியைக்கு பிரதமர் பாராட்டு

மதுரை: தினமலர் நாளிதழில் கட்டுரை வெளியான மதுரை வரிச்சியூர் அரசு உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியை சுபஸ்ரீயை மன் கி பாத் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி பேசினார்.பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். அதில் சாதனையாளர்கள், தியாகிகளையும் அவர் பாராட்டத் தவறுவதில்லை.பிரதமர் பேசுகையில் மூலிகைத் தோட்டம் அமைத்து சேவையாற்றும் மதுரை வரிச்சியூர் அரசு உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியை சுபஸ்ரீயை பாராட்டினார். ஆசிரியை சுபஸ்ரீ குறித்த கட்டுரை ஆக.,11 தினமலர் நாளிதழின் சண்டே ஸ்பெஷல் பகுதியில் வெளியானது.பிரதமர் பேசியதாவது: எனதருமை நாட்டு மக்களே... நமது அருகில் இருப்பவர்களில் சிலர் பேரிடர் காலங்களில் பொறுமையை இழப்பதில்லை. மாறாக அதில் இருந்து கற்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு பெண்ணின் பெயர் சுபஸ்ரீ. இவர் தனது முயற்சியின் துணையால் கடினமான மற்றும் பயனுள்ள மூலிகைகளால் ஒரு அற்புதமான பூங்காவை உருவாக்கி இருக்கிறார்.இவர் தமிழ்நாட்டின் மதுரையில் வசிப்பவர். தொழில் ரீதியாக ஆசிரியையாக இருந்தாலும், மருத்துவத் தாவரங்களின்பால் இவருக்கு அலாதியான பிரியம் இருக்கிறது. இவருடைய இந்த ஈடுபாடு 1980 களில் துவங்கியது. ஒருமுறை இவரது தந்தையை நச்சுப் பாம்பு தீண்டியபோது, பாரம்பரியமான மூலிகைகளைக் கொண்டு உடல் நலம் மீட்சிபெற உதவிகரமாக இருந்தார்.இச்சம்பவத்திற்கு பிறகு பாரம்பரியமான மருத்துவ தாவரங்களைப் பற்றிய தேடலை துவக்கினார். இவருடைய வித்தியாசமான மூலிகைப் பூங்காவில் 500க்கும் மேற்பட்ட அரிய வகைமூலிகைச் செடிகள் இருக்கின்றன.தனது பூங்காவை உருவாக்க இவர் தீவிரமாக உழைக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு தாவரத்தையும் தேடித்தேடி தொலை துாரங்களுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளார். தகவல்களை திரட்டி இருக்கிறார். பலமுறை மற்றவர்களிடம் உதவியையும் கோரி இருக்கிறார்.கோவிட் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய மருத்துவ மூலிகைகளை மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார். இன்று இவருடைய மூலிகைப் பூங்காவுக்கு தொலைவான பகுதியில் இருந்தும் பலர் வருகின்றனர். அனைவருக்கும் மருத்துவ தாவரங்கள் பற்றிய தகவல்களையும், பயன்பாடுகளையும் விளக்குகிறார்.சுபஸ்ரீ, பலநுாறு ஆண்டுகளாக நமது கலாசாரத்தின் அங்கமாக விளங்கும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறார். அவருடைய மூலிகைப் பூங்கா நமது கடந்த காலத்தை வருங்காலத்தோடு இணைக்கிறது. அவருக்கு நமது பலப்பல நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார்.பிரதமரின் பாராட்டு குறித்து அவர், இரண்டு நாள் முன்னதாக துார்தர்ஷனில் இருந்து மூலிகைத் தோட்டம் பற்றி கேட்டுச் சென்றனர். பிரதமர் என்னைப்பற்றி பேசுவார் என யாரும் கூறவில்லை. நாட்டின் கடைக்கோடியில் உள்ள என்னை, பிரதமரே தேடிப்பிடித்து தேர்வு செய்து பாராட்டியது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு காரணமான தினமலர் நாளிதழுக்கு நன்றி, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்