பள்ளியில் திரையிடப்பட்ட சினிமா கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை
திருநெல்வேலி: விக்கிரமசிங்கபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்களை மாணவிகளிடம் கட்டணம் வசூல் செய்து திரையிட்டது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே விக்கிரமசிங்கபுரத்தில் அரசு உதவி பெறும் அமலி பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ நிர்வாகத்தினர் நடத்தும் இப்பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன் மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு விஜய் நடித்த கோட் திரைப்படமும், அதன் வளாகத்தில் துவக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ரஜினி நடித்த வேட்டையன் படமும் திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக முறையே ரூ.25 மற்றும் ரூ.10 கட்டணமாக வசூலித்துள்ளனர்.கட்டாய வசூல் செய்து பள்ளியில் திரைப்படம் திரையிட்டது குறித்து பெற்றோர் புகார் செய்தனர். இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்டு கட்டணத்தை திரும்ப கொடுக்க உத்தரவிட்டனர்.மாணவ, மாணவிகளின் இறுக்கத்தை தளர்த்தி ரிலாக்ஸ் ஆக இருக்கவே படம் திரையிட்டோம். அது சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது என ஆசிரியைகள் தெரிவித்தனர்.