பொள்ளாச்சியில் ஐ.டி., பார்க் அமைக்கப்படும்! அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் ஐ.டி., பார்க் அமைக்க, முதல்வரிடம் கேட்டு அனுமதி பெற்றுத்தருவேன், என அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்தார்.பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து, பொள்ளாச்சி திருவிழா நிகழ்ச்சி வரும், 29ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதன் துவக்க விழா, பொள்ளாச்சி கே.கே.ஜி., திருமண மண்டபத்தில் நடந்தது. தொழில்வர்த்தக சபை தலைவர் வெங்கடேஷ் வரவேற்றார்.பொள்ளாச்சி திருவிழா தலைவர் ஆனந்தகுமார், நிகழ்ச்சி குறித்து விளக்கினார். மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். எம்.பி., ஈஸ்வரசாமி, சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா, கூடுதல் எஸ்.பி., சிருஷ்டி சிங் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:பொள்ளாச்சி திருவிழாவில் ஒன்பது நாட்களில், 55 நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 'சினிமா என்றாலும், சுற்றுலா என்றாலும் நினைவுக்கு வருவது பொள்ளாச்சி தான்.இங்கு வரக்கூடிய ஆண்டுகளில், தமிழ்நாட்டின் சுற்றுலா தலங்களில், முதன்மை தலமாக பொள்ளாச்சியை மாற்றுவதற்கு என்னென்ன திட்டங்கள் தேவையோ அது அனைத்தும் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று நிச்சயமாக பெற்றுத்தருவோம். நாம் இணைந்து அதை செயல்படுத்துவோம் என்ற உறுதியை தெரிவித்துக்கொள்கிறேன்.பொள்ளாச்சியில் விரைவில், ஒரு ஐ.டி., பார்க் அமைப்பதற்காக ஒரு திட்டத்தை முதல்வரிடம் கேட்டு, நிச்சயம் அனுமதி பெற்றுத்தருவேன். பொள்ளாச்சிக்கும், மாவட்டத்துக்கும் உரிய வளர்ச்சியை மேம்படுத்த துணை நிற்போம்.தொழில் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் அனைவரும் இணைந்து பொள்ளாச்சிக்கு என்ன தேவை என்பதை கருத்துரு உருவாக்கித்தாருங்கள்; அதை முதல்வரிடம் பேசி நிச்சயம் செயல்படுத்துவோம். தொழில், விவசாயம், சுற்றுலா மேம்பட முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளில் சிறந்த நபர்கள், அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. செயலாளர் சபரி கண்ணன் நன்றி கூறினார்.