கவனச்சிதறலுக்கு காரணம் மொபைல் போன் மாணவர்களிடம் இறையன்பு எச்சரிக்கை
கண்ணகி நகர்: கண்ணகி நகர் அரசு மேல்நிலை பள்ளியில், 1,150 பேர் படிக்கின்றனர். இதில், 10 முதல் 12ம் வகுப்பு வரை 418 பேர் உள்ளனர்.இவர்களில், 12ம் வகுப்பில் 122 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். கடந்த ஆண்டுகளில், தேர்வு பயம், படிப்பில் ஆர்வமின்மை, வீட்டு சூழலால் வேலைக்கு செல்வது போன்ற காரணங்களால், 12ம் வகுப்பில் இடைநிற்றல் அதிகரித்தது.அதுபோல், இந்த ஆண்டு, 122 பேரையும் தேர்வு எழுத வைத்து, டிகிரி படிக்க வைக்க வேண்டும் என, முதல் தலைமுறை கற்றல் மையம் முடிவு செய்தது. இதற்காக, 122 பேரின் வீடுகளுக்கு, பசுமை துாதுவர்கள் சென்று, அவர்களின் தேவைகளை அறிய முடிவு செய்துள்ளனர்.இதற்கான ஊக்குவிப்பு முகாம், நேற்று துவங்கியது. இதில், முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பங்கேற்றார்.அவர் பேசியதாவது:கண்ணகி நகரில் பிளஸ் 2 படிக்கும் 122 பேரும் தேர்வு எழுதி மேல் படிப்பு படிப்பதை உறுதி செய்ய, பசுமை துாதுவர்கள் ஒவ்வொருவர் வீட்டுக்கும் வந்து உரையாடுவர். அவர்களிடம், படிப்புக்கான தேவையை கூறலாம். தேர்வு பயம், மன அழுத்தம் இருந்தால், பசுமை துாதுவர்களிடம் கூறி, பிரச்னைக்கு தீர்வு காணலாம்.தேவைப்பட்டால், 122 மாணவ - மாணவியர் வீடுகளுக்கும் நானே வருகிறேன். கவனச் சிதறல் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். கவனச் சிதறலுக்கு மொபைல் போன் முக்கிய காரணம். குறிப்பிட்ட நேரத்தில் குறுஞ்செய்தியை பார்த்துவிட்டு, அணைத்து வைத்துவிட்டு பாடத்தை படிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.