நம் நாட்டு கல்வி முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது: பிரதமர் மோடி
சென்னை: பட்ஜெட்டுக்குப் பிந்தைய வேலைவாய்ப்பு குறித்த இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார்.கருத்தரங்கில் அவர் பேசியதாவது:இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் வலுவான தொழிலாளர் சக்தி, வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு வழி வகுக்கிறது. உள்கட்டமைப்பு, தொழில்கள், மனித சக்தி, பொருளாதாரம், புத்தாக்க கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் முதலீடுகளுக்கு சமமான முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கல்வி, திறன், சுகாதாரம் ஆகிய மூன்று தூண்களின் அடிப்படையில் மனித சக்தியில் முதலீடு என்ற தொலைநோக்குப் பார்வை உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் கல்வி முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவ வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பகல்நேர பராமரிப்பு புற்றுநோய் மையங்கள், மின்னணு சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் மூலம், தரமான சுகாதார சேவையை கடைக்கோடிக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சுற்றுலாவை மையமாகக் கொண்டு நாடு முழுவதும் 50 சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும். சுற்றுலா இடங்களில் உள்ள ஓட்டல்களுக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்குவது சுற்றுலாவை எளிதாக்கி உள்ளூர் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும்.புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க இந்த பட்ஜெட்டில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி தொகுப்பு நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஞான பாரதம் இயக்கத்தின் மூலம் இந்தியாவின் வளமான கையெழுத்துப் பிரதி பாரம்பரியத்தை பாதுகாக்கும் அறிவிப்பு மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான கையெழுத்துப் பிரதிகள் மின்னணு வடிவத்திற்கு மாற்றப்படும்.இவ்வாறு பேசினார்.