பெங்களூருக்கு விமானத்தில் பறந்த பல்லாவரம் அரசு பள்ளி மாணவர்கள்
பல்லாவரம்: பல்லாவரத்தில், மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் படிப்பில் மட்டுமின்றி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் அசத்தி வருகின்றனர்.இந்த நிலையில், விளையாட்டு, கலைத் திருவிழா, கிளாட், என்.எம்.எம்.எஸ்., ஆகியவற்றில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றிப் பெற்ற, 13 மாணவ - மாணவியரை கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து செல்ல, தலைமை ஆசிரியர் ரவி காசி வெங்கட்ராமன் மற்றும் ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.இதையடுத்து, தட்ஸ் மை சைல்ட் என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், 13 மாணவர்களும், பெங்களூருவில் உள்ள விஸ்வேஸ்வரையா அருங்காட்சியத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.விமானம் வாயிலாக பெங்களூருக்கு அழைத்து செல்லப்பட்டு, கல்வி சுற்றுலா முடிந்து மீண்டும் விமானத்திலேயே, நேற்று முன்தினம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.கடந்தாண்டு, இதேபோல் 13 மாணவர்கள், 'இஸ்ரோ' ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.