உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தருவதாக பண மோசடி

உடுப்பி: நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர் ரோனக் ஷெட்டி. இவர் சமீபத்தில், நீட் தேர்வு எழுதினார். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தருவதாக கூறி, அடையாளம் தெரியாத நபரிடமிருந்து வாட்ஸாப்பில் தகவல் வந்துள்ளது.கேட்கும் பணத்தை கொடுத்தால், அதிக மதிப்பெண்கள் பெறலாம் என கூறப்பட்டு இருந்தது. இதை நம்பிய ரோனக் ஷெட்டி, தன் தந்தை மொபைல் போனிலிருந்து 17 ஆயிரம் ரூபாயை, குறிப்பிட்ட மொபைல் போன் எண்ணுக்கு அனுப்பி உள்ளார்.இதையடுத்து, அவரது வாட்ஸாப்புக்கு மதிப்பெண் அட்டை வந்தது. இதில், ரோனக் ஷெட்டி 646 மதிப்பெண்கள் பெற்று, இந்திய அளவில் 107வது இடத்தை பிடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்த அவர், மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் இது நீடிக்கவில்லை. நீட் தேர்வு முடிவுகளில், அவரது மதிப்பெண் 65 எனவும், தரவரிசையில் 17,62,258வது இடத்தில் இருப்பதும் தெரிந்தது.இதை அறிந்த அவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். தன் தந்தையிடம் தெரிவித்தார். அவர், உடுப்பி சைபர் போலீசிடம் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்