கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் இடம் பெற வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மதுரை: தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழ் பாடம் இடம் பெற உத்தரவிட தாக்கலான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.தமிழக கட்டட தொழிலாளர் மத்திய சங்க தலைவர் பொன்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்களின் குழந்தைகள் அதிகம் பேர் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கின்றனர். ஒரு வகுப்பில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தாய்மொழி பயிற்றுவிக்கப்படும் என்ற கேந்திரிய வித்யாலயா கல்வி விதி, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது. தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழ் பாடம் இடம்பெற வேண்டும். அங்கு நிரந்தர பணியில் தமிழாசிரியர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மத்திய கல்வி அமைச்சக பாடத்திட்டத்திற்குட்பட்டவை. நீதிமன்றம் தலையிட முடியாது. குறைபாடுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.