உள்ளூர் செய்திகள்

எம்.குமாரசாமி கல்லுாரியின் புற்றுநோய் கட்டுரை சர்வதேச அறிவியல் இதழ்களில் வெளியீடு

கரூர்: கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், மீண்டும் ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கான, ரிபோ நியூக்ளிக் அமில மரபணு அடையாளங்களை கண்டறிதல் மற்றும் நியூரல் நெட்வொர்க் பயன்பாடு என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மத்திய அரசின் அனுசந்தான் தேசிய ஆராய்ச்சி உதவியுடன், கல்லுாரியின் தகவல் தொழில்நுட்ப துறை இணை பேராசிரியர் கீதா தலைமையில், திட்ட உதவி ஆய்வாளர் ரேணுகா இணைந்து ஆய்வை மேற்கொண்டனர். இதன் மூலம், கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மற்றும் மீண்டும் நோய் ஏற்பட்ட பெண்களின், மருத்துவ தகவல் சேகரிக்கப்பட்டு, உலகளாவிய மரபணு தரவுகளுடன் இணைத்து ஆய்வு செய்யப்பட்டது.மேலும், நோய் மீள்ச்சியை ஏற்படுத்தும் முக்கிய மரபணு அடையாளங்கள் கண்டறியப்பட்டன. நியூரல் நெட்வொர்க் தொழில்நுட்பம் மூலம், நோயின் எதிர்கால நிலையை முன்கூட்டியே கணிக்கும் முறையில் செயலி உருவாக்கப்பட்டது. பெண்களுக்கு ஆரம்ப நோய் கண்டறிதல், சரியான சிகிச்சை முறை மற்றும் நல்ல வாழ்க்கை முறையின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.நோயாளிகளுக்கான மொபைல் செயலி மூலம், சுகாதார கண்காணிப்பு, விழிப்புணர்வு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மருத்துவம், மரபணு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, புற்றுநோய் மேலாண்மையில் முக்கிய முன்னேற்றமாக அமைத்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகளை, இரு சர்வதேச அளவிலான அறிவியல் இதழ்களில் கட்டுரைகளாக வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு, கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன், அறங்காவலர் விஜயா ராமகிருஷ்ணன், இணை செயலர் சரண்குமார், நிறுவன வளர்ச்சி இயக்குனர் சக்தி ஸ்ரீ, செயல் இயக்குனர் குப்புசாமி, முதல்வர் முருகன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்