உள்ளூர் செய்திகள்

உள்நாட்டு பொருட்களுக்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டும்: காமகோடி

“உள்நாட்டு பொருட்களுக்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டும். அதே நேரம், கிராமத்து பள்ளி மாணவர்களை தத்தெடுத்து, மேற்கல்வி அறிவை வளர்க்கவும் முன்வர வேண்டும்,” என, பிரின்ஸ் பொறியியல் கல்லுாரிகள் பட்டளிப்பு விழாவில், சென்னை, ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி வேண்டுகோள் விடுத்தார். சென்னை பொன்மாரில் இயங்கி வரும், ஸ்ரீவெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லுாரி மற்றும் பிரின்ஸ் டாக்டர் கே.வாசுதேவன் பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரி ஆகியவற்றின் பட்டமளிப்பு விழா கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், சென்னை ஐ.ஐ.டி.,யின் இயக்குனர் காமகோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:நமக்கு உள்ள தொழில்நுட்பத்தை நாம் வளர்க்க வேண்டும். கொரோனா தடுப்பூசிக்காக நாம் வெளிநாடுகளின் தயவுக்கு ஓராண்டு காத்திருந்தால், ஒரு ஊசிக்கு 10,000 ரூபாய் செலவு செய்திருப்போம். அதே தடுப்பூசியை, 500 ரூபாய்க்குள் நாம் கண்டுபிடித்து, 275 கோடி ஊசிகள் செலுத்தப்பட்டன. மேலும், பல நாடுகளுக்கும் நாம் வழங்கினோம். இது தான் நம் பாரத தேசம். எனவே, சுதேசி தொழில்நுட்பம் முக்கியம். சிவில் இன்ஜினியர்கள் இல்லை என்றால் நாடு இல்லை. அனைவரும் நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என நினைக்க வேண்டும். தற்போது அதிகமாக உள்ள இறக்குமதியை குறைக்க, உள்நாட்டு பொருட்களுக்கு நாம் முக்கியத்துவம் தந்து ஊக்குவிக்க வேண்டும். நம்நாட்டில் படிக்கும், 100 மாணவர்களில், 29 பேர் மட்டுமே உயர்கல்வி கற்கின்றனர்; 71 பேர் வருவதில்லை. கல்வி அறிவு வளராவிட்டால், நாடு பின்தங்கிவிடும். எனவே, கிராமத்து மாணவர்களை தத்தெடுத்து, மேற்கல்வி அறிவை வளர்க்க முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். விழாவில் பல்கலை அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, 'ஜோஹோ புராடக்ட்' நிறுவன மேலாண்மை இயக்குனர் ராஜலட்சுமி ஸ்ரீனிவாசன் பேசியதாவது: இந்த பட்டம் என்பது துவக்கம் மட்டுமே. படித்து வேலை கிடைத்துவிட்டால் வாழ்க்கை நிறைவடைவதில்லை. படிப்பிற்கு முடிவில்லை. உங்கள் கல்வி அறிவை வளர்த்துக் கொண்டே இருங்கள். புதிய தொழில்நுட்பங்கள் வளர்கின்றன. நேற்று கற்றதை விட இன்று ஒரு சதவீதமாவது கூடுதல் கற்க வேண்டும் என நினைக்க வேண்டும்.நம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறன் உள்ளது. அதை கண்டறிந்து வளர்த்துக் கொள்ள வேண்டும். நமக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. சாதிக்க வேண்டியதும் நிறைய உள்ளது.இவ்வாறு அவர் பேசினார். இரண்டு கல்லுாரிகளிலும், 488 மாணவ, மாணவியர் பட்டங்களை பெற்றனர். இதில், பல்கலை அளவில், 21 பேர் சிறந்த மதிப்பெண்களுடன் பட்டங்களை பெற்றனர். முன்னதாக, பிரின்ஸ் கல்விக் குழும தலைவர் டாக்டர் வாசுதேவன் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்து, பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்தார். துணைத் தலைவர் விஷ்ணுகார்த்திக் வரவேற்று பேசினார்.விழாவில், கல்லுாரி டீன் பத்மாவதி, முதல்வர்கள் சுந்தர்செல்வின், இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்