பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் அறிமுகம்
கடலுார்: பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குவதற்காக 'பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:இத்திட்டம் மாணவர்களின் வேலைவாய்ப்பு திறன், நடைமுறை அனுபவம் மற்றும் திறன் மேம்பாட்டை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் முக்கிய அம்சமாக மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை 9,000 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும், ஒருமுறை சேர்க்கை நிதியும் வழங்கப்படுகிறது.இந்தியா முழுவதும் உள்ள முன்னணி நிறுவனங்களில் 6 அல்லது 9 மாத கால இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.தொழில் துறை அனுபவம், திறன் மேம்பாடு மற்றும் இன்டர்ன்ஷிப் காலத்தில் காப்பீட்டு பாதுகாப்பும் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. 18 முதல் 25 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.முழுநேர வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியுடையவர்கள். குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேல் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.இதில் ஐ.டி.ஐ., மாணவர்கள், டிப்ளமோ பயிலும் மாணவர்கள், இளங்கலை, முதுகலை மாணவர்கள், பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.கடலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாடு மையங்களில் பயிலும் மாணவர்கள் பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டத்தில், https://mybharat.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.