இணை இயக்குநர் ஆய்வில் நம்பிக்கை இல்லாத கமிஷனர் தலைமையாசிரியர்கள் எதிர்ப்பு
மதுரை: மதுரை உள்ளிட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் புத்தகங்கள் வைக்கப்படும் அலமாரிகள் இருப்பு குறித்து அத்துறை இணை இயக்குநர் ஆய்வு நடத்திய நிலையில், தற்போது விடுதி காப்பாளர்கள் ஆய்வு செய்ய மிகவும் பிற்பட்டோர் சீர்மரபினர் நலத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளதற்கு தலைமையாசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் செயல்படும் 295 கள்ளர் பள்ளிகளுக்கு நுாலக புத்தக அலமாரி வசதிகள் செய்வதற்கு உத்தரவிடப்பட்டது. மதுரை மாவட்டத்தில் 149 பள்ளிகளுக்கு இவ்வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது இவற்றின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கள்ளர் பள்ளி இணை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டது. இதன்படி அறிக்கை அளிக்கப்பட்ட நிலையில் இணை இயக்குநருக்கு கீழ் செயல்படும் விடுதி காப்பாளர்களை ஆய்வு அலுவலர்களாக கொண்டு மீண்டும் ஆய்வு நடத்த பிற்பட்டோர் சீர்மரபினர் நலத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.இது இணை இயக்குநர், தலைமையாசிரியர் மீது நம்பிக்கையில்லாத தன்மையை காட்டுவதாக அத்துறைக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தலைமையாசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இது குறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை தலைமையாசிரியர் சங்கம் மாநில அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது: இது தொடர்பாக பள்ளிகளில் உள்ள அலமாரிகள் குறித்து அந்தந்த தலைமையாசிரியர்கள் சார்பில் ஜி.பி.எஸ்., கேமரா மூலம் புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வைக்கப்பட்டது. இதன் பின் இணை இயக்குநர் தலைமையிலான குழுவும் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பியது.ஆனால் தற்போது விடுதி காப்பாளர்கள் குழுவை கமிஷனர் நியமித்துள்ளார். இது இணை இயக்குநர், தலைமையாசிரியர்களை அவமதிப்பதாகும். கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் ஆய்வுக்கு பின் அவருக்கு கீழ் செயல்படும் பிற்பட்டோர் நல காப்பாளர்களின் ஆய்வு என்பது கண்டிக்கத்தக்கது. கமிஷனரின் இந்த உத்தரவுக்கு தலைமையாசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.