உள்ளூர் செய்திகள்

பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

கரூர்: பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித்துறை பதவி உயர்வு கலந்தாய்வுகளை உடனே நடத்த வேண்டும் என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மலைக்கொழுந்தன் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள், முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலிப்பணியிடம் காரணமாக மாணவர்களின் கற்றல் திறனும், கூடுதல் பணிகளின் காரணமாக ஆசிரியர்களுக்கு அதிக பணிப்பளுவும், மன அழுத்தமும், நிர்வாக பிரச்னைகள் மற்றும் கற்பித்தல் திறன் பாதிக்கப்படுகிறது. எனவே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் சார்ந்து பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.ஒவ்வொரு ஆண்டும் ஜன., 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு, ஆண்டுதோறும் கல்வி துறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. கடந்த, 2022ம் ஆண்டுக்கு பின், பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கவில்லை. பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றி வரும், 2 லட்சம் ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.இதனால் பணி நிரவலில் உள்ள உபரி ஆசிரியர் பணியிடங்கள் முடிவுக்கு வரும். மேலும் படித்து முடித்து வேலைக்கு காத்திருக்கின்ற, 10,000 இளைஞர்களுக்கு ஆசிரியர் பணி வேலை வாய்ப்பு கிடைக்கும். கடந்த காலங்களில் நீதிமன்ற தடையாணைகள், வழக்குகள் எனப் பதவி உயர்வு வழங்குவதில் தடைகள் இருந்தன. தற்போது, பதவி உயர்வு வழங்குவதற்கு எந்த சட்ட தடைகளும் இருப்பதாக தெரியவில்லை. பதவி உயர்வு கலந்தாய்வுகளை, காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடத்திட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்