மாணவர்கள் போராட்டம்; தேர்வுகளை ரத்து செய்ய ஜார்க்கண்ட் அரசு முடிவு
ராஞ்சி: ஜார்க்கண்டில், அரசு போட்டித் தேர்தவில் முறைகேடு நடந்ததாகக் கூறி மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, மூன்று தேர்வுகளையும் ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.கடந்த 25ம் தேதி முதல் ராஞ்சியில் நடக்கும் போராட்டம், நேற்று 16வது நாளை எட்டியது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மூன்று பேரின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, டாக்டர்கள் கண்காணிப்பில் போராட்டம் நடக்கிறது.இதற்கிடையே, மாணவர்கள் அமைப்புடன் ஜார்க்கண்ட் அரசு பிரதிநிதிகள் பேச்சு நடத்தினர். அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். இந்நிலையில், முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் மூன்று தேர்வுகளை ரத்து செய்ய ஜார்க்கண்ட் அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.