நல்சார் பல்கலை விவகாரம்: மன்னிப்பு கேட்டார் பார் கவுன்சில் தலைவர்
புதுடில்லி: நல்சார் சட்டப் பல்கலையில், 2026ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளின் பதிவை நிறுத்தி வைக்கும்படி இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மன்னிப்பு கேட்டார்.தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில், நல்சார் சட்டப் பல்கலை செயல்படுகிறது. இந்த பல்கலையின் பட்டமளிப்பு விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பங்கேற்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பல்கலை மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.'இந்த போராட்டம் குறித்த விசாரணை முடியும் வரை, 2026ல் தேர்ச்சி பெறும் எந்தவொரு மாணவரையும் மாநில பார் கவுன்சில்கள் வழக்கறிஞராக பதிவு செய்யக் கூடாது' என, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா சுற்றறிக்கை வெளியிட்டார். எனினும், சில மணி நேரங்களிலேயே சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டது.இது தொடர்பான வழக்கை சமீபத்தில் விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், 'இது எனக்கும், மாணவர்களுக்கும் இடையேயான விவகாரம். இதில் தலையிட இந்திய பார் கவுன்சினுக்கு என்ன உரிமை இருக்கிறது?' என, கேள்வி எழுப்பினார்.இந்நிலையில், இந்த விவகாரத்தில், இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா மன்னிப்பு கேட்டார். என் வார்த்தைகள் அல்லது கடிதங்கள் ஏதேனும் நம் சட்ட மாணவர்களின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், வருத்தம் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.