ஆராய்ச்சியுடன் கூடிய கல்வி சமூக வளர்ச்சிக்கு அவசியம்: துணை ஜனாதிபதி
ஈரோடு: "ஆராய்ச்சியுடன் கூடிய கல்வியால் சமூகம் வளர்ச்சி பெறும்," என, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேசினார்.ஈரோடு அருகே கொங்கு பொறியியல் கல்லுாரி வளாகத்தில், 'தி கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டிரஸ்ட் நிறுவனர் தினவிழா' மற்றும் 100 கோடி ரூபாய் மதிப்பில் 'அறிவுக்கூடம்' ஆராய்ச்சி பூங்காவுக்கான கல்வெட்டு திறப்பு விழா நேற்று நடந்தது.'அறிவுக்கூடம், கிளவுட் கிச்சன்' ஆகியவற்றுக்கான கல்வெட்டை திறந்து வைத்து, துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணன் பேசியதாவது:பாரதத்தை முன்னேறிய நாடாக, முதல் இடத்துக்கு கொண்டு வருவதற்காக நாம் உழைக்கிறோம். இதற்கு உயர்கல்வி, தகவல் தொழில் நுட்பம், விஞ்ஞானம், ஏ.ஐ., - அறிவியல் தொழில் நுட்பங்கள் வளர வேண்டும். ஆராய்ச்சியுடன் கூடிய கல்வியால் சமூகம் வளர்ச்சி பெறும்.இந்தியா வல்லரசாக, கடந்த, 13 ஆண்டுகளுக்கு மேலாக பல திட்டம் வகுத்து செயல்பட்டதால், பொருளாதாரத்தில் உலகில் முன்னேறிய நாடுகளில், ஐந்தாவது இடத்தில் நாம் உள்ளோம்.இந்தியாவில், 25 கோடி மக்களுக்கு மேல் ஏழையாக, வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தவர்கள் வளர்ச்சி பெற்றுள்ளனர். ஒவ்வொருவரும் கடுமையாக படித்து, உழைத்து முன்னேற வேண்டும்.தினம் தினம் விஞ்ஞானம், அறிவியல் தொழில் நுட்பம் என முன்னேற்றம் அடைவதற்கு ஏற்ப, நாமும் முன்னேறினால், நாடும் முன்னேறும்.இவ்வாறு பேசினார்.விழாவில், தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், கொங்கு அறக்கட்டளை தலைவர் தேவராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.