பதிவு மூப்பு மூலம் ஆசிரியர் நியமனம்: ஐகோர்ட் கிளையில் வழக்கு
மதுரை: மாநில பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கும் ஐகோர்ட் உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மீண்டும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்தவர் உஷா. இவர் உட்பட வேலையில்லாத இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் ஐகோர்ட் கிளையில் ஏற்கனவே ஒரு மனு தாக்கல் செய்தனர். அம்மனுவில், ‘தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுவதால் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு சேலம் தர்மபுரி, போன்ற மாவட்டங்களில் உடனடியாக வேலை கிடைத்து விடுகிறது. அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என கூறியிருந்தனர். இம்மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, பி.முருகேசன் கொண்ட பெஞ்ச், ‘அரசின் உத்தரவை ரத்து செய்து அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வகையில் மாநில அளவில் பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தனர். இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி புதுக்கோட்டை, கரூர், ஓசூர், நீலகிரி, தஞ்சை, திருவண்ணாமலை, வேலுõர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 39 பேர் ஐகோர்ட் கிளையில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதில், ‘இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதைப் பொறுத்தமட்டில் இந்திய அரசியலமைப்பு சட்டம் 309 பிரிவின் கீழ் சிறப்பு விதி உருவாக்கப்பட்டு, மாவட்ட அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப அரசு முடிவு செய்தது. இந்த சிறப்பு விதியை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்படவில்லை. அரசியலமைப்புசட்டப்படி சிறப்பு விதியின் கீழ் உருவாக்கப்பட்ட அரசு உத்தரவை எதிர்க்காத பட்சத்தில் மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டது சரியல்ல. அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற ஒரே கருத்தை மட்டும் வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டதும் சரியல்ல. ஐகோர்ட் உத்தரவால் பாதிக்கப்பட்டு உள்ளோம். அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு கூறியிருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் எலிப் தர்மாராவ், சுப்பையா கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணக்கு வந்தது. அரசு வக்கீல் கூறுகையில், ‘இந்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளது. விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.