நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி :திருத்தம் செய்ய 3 நாள் வாய்ப்பு
திருப்பூர்: நடப்பாண்டுக்கான நீட் தேர்வுக்கு இன்று நள்ளிரவு, 12:00 மணி வரை மட்டும் விண்ணப்பிக்க முடியும். திருத்தங்களுக்கான தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளதால், இனி, கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை.வரும், மே, 5ம் தேதி நீட் தேர்வு நடக்கவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, பிப்., 9 முதல், மார்ச், 9 வரை தேர்வுக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டது. பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்த வந்த நிலையில், மாணவர்கள் விண்ணப்பிக்க முடியவில்லை என தெரிவித்தனர். இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர் வசதிக்காக, கால அவகாசம் மார்ச், 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.புதிய அறிவிப்பின் படி, இன்று இரவு, 12:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்; அதன் பின் விண்ணப்பிக்க இயலாது. இந்நிலையில், விண்ணப்பித்தவர்கள் தேர்வு மையம், பெயர், முகவரி உள்ளிட்டவற்றில் மாற்றம், திருத்தம் செய்ய வரும், 18 முதல், 20 வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதால், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இனி நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை. திருப்பூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளை சேர்ந்த, 500க்கும் அதிகமான மாணவ, மாணவியர் இன்று (நேற்று) வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று மாவட்ட நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.