உள்ளூர் செய்திகள்

தேசிய புகையிலை விழிப்புணர்வு போட்டி: பி.எஸ்.பாளையம் அரசுப் பள்ளி 3ம் இடம்

புதுச்சேரி: உலக புகையிலை எதிர்ப்பு தின, தேசிய விழிப்புணர்வு போட்டியில், பி.எஸ்.பாளையம் பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளி மூன்றாம் இடம் பிடித்தது.மத்திய கல்வி அமைச்சகத்தின், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை சார்பில், உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, புகையிலைப் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்த, விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில், 'பள்ளிகளுக்கான சவால்' என்ற தலைப்பிலான போட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இதில், பேரணி, சுவரொட்டிகள், முழக்கங்கள், கவிதைகள் என நான்கு தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் எனவும், அதிக பட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.இதில், நாடு முழுதும் பல்வேறு பள்ளிகள் பங்கேற்று, அது குறித்த அனைத்து தகவல்களும், மத்திய கல்வி அமைச்சகத்தின், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டது. மத்திய கல்வி அமைச்சகம், இந்த நிகழ்ச்சிகளை பரிசீலித்து சிறந்த பள்ளிகளை தேர்வு செய்திருந்தது. அதில், புதுச்சேரி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வழிகாட்டுதல்படி பங்கேற்ற பி.எஸ்.பாளையம் பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளி மூன்றாம் இடம் பிடித்தது.டில்லியில் நடந்த பரிசளிப்பு விழாவில், பள்ளி துணை முதல்வர் ராமமூர்த்தி, போதை பொருள் ஒழிப்பு நோடல் அதிகாரி சார்லஸ்பால் ஆகியோர், பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலர் சஞ்ஜய் குமார், பொருளாதார ஆலோசகர் ஸ்ரீஜா, என்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானி, என்.வி.எஸ்., ஆணையர் ராஜேஷ் லகானி ஆகியோரிடம், விருது, மற்றும் பரிசுத் தொகை 15 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்