உள்ளூர் செய்திகள்

நிலவை நோக்கி இன்று ஏவப்படும் சந்திரயான் - 3

சென்னை: நிலவுக்கு செல்லும் சந்திரயான் - 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 - எம்4 ராக்கெட் இன்று(ஜூலை 14) பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்வதற்கு, சந்திரயான் - 3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது. திட்ட செலவு 615 கோடி ரூபாய். சந்திரயான் - 3 விண்கலத்தில், நிலவில் தரையிறங்கும் லேண்டர், ரோவர் சாதனங்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சந்திரயான் - 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 - எம்4 ராக்கெட், இன்று பிற்பகல், 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான, 25 மணி நேரம், 30 நிமிட, கவுன்ட் டவுன் நேற்று பிற்பகல் 1:00 மணிக்கு துவங்கியது.பூமியில் இருந்து புறப்படும் ராக்கெட், 173 கி.மீ., துாரம் உள்ள சுற்றுவட்ட பாதையில், சந்திரயான் - 3 விண்கலத்தை நிலைநிறுத்தும். அங்கிருந்து சுற்றுவட்ட பாதையில், 36,500 கி.மீ., துாரம் வரை விண்கலம் அனுப்பப்படும். பின், உந்து இயந்திரம், ராக்கெட் போல் செயல்பட்டு, சந்திரயான் - 3 விண்கலத்தை, நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு திருப்பி, நிலவை நோக்கி பயணிக்க வைக்கும். ஆக., 23 அல்லது 24ம் தேதி, சந்திரயான் - 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் சாதனத்தை நிலவில் தரையிறக்க, இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிகழ்வை காண உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.கடந்த 2008 அக்., 22ல் நிலவுக்குச் சென்ற சந்திரயான் - 1 விண்கலம், நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை உலகிற்கு வெளிப்படுத்தியது.இதேபோல் சந்திரயான் - 3 விண்கலமும் நிலவு தொடர்பான பல புதிய தகவல்களை கண்டறிய உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்