சிவில் சர்வீஸ் தேர்வை ஆன்-லைனில் நடத்த பரிந்துரை
முதல் நிலை தேர்வுகள் ஆன்-லைன் மூலமாக நடத்தப்படுவதோடு, நேர்முகத் தேர்வு முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான மத்திய பணியாளர் நலத்துறை தொடர்பான பார்லிமென்ட் நிலைக்குழு, சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அந்த பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். அந்த ஆணையத்தின் செயல்பாடுகள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். அதேபோல், சிவில் சர்வீஸ் தேர்வு முறைகள் மிகவும் எளிமையாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுகள், ‘ஜி மேட்’ தேர்வுகள் போல, ஆன்-லைனில் நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தினால், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோர், தங்களின் மதிப்பெண்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, தேர்வை நடத்துவதற்கும், விடைத்தாள்களை திருத்துவதற்கும் ஏராளமான நேரம் வீணடிக்கப்படுவது தடுக்கப்படும். சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு நடைமுறைகளை வீடியோ படம் எடுக்கலாம். அப்படி எடுத்தால், நேர்முகத்தேர்வில் பங்கேற்றவர் சரியான பதில்களை அளித்தாரா, அதற்கு சரியான மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை நிர்வாகத்தினர் சரி பார்க்க முடியும். சிவில் சர்வீஸ் பணிக்கான நேர்முகத் தேர்வுகள் இதர பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு தனியாக நடத்தப்படுகின்றன. இது சட்ட விதிகளுக்கு முரணானது. விண்ணப்பதாரர்களை அவர்களின் செயல்திறன் அடிப்படையில் தான் மதிப்பீடு செய்ய வேண்டுமே தவிர, குறிப்பிட்ட பிரிவினர் அடிப்படையில் மதிப்பீடு செய்யக் கூடாது. தற்போதைய நேர்முகத் தேர்வு முறையால், அந்த தேர்வுக்கான ஆணையத்தில் இடம் பெறும் உறுப்பினர்கள், குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிராக செயல்பட முடியும். அதனால், தகுதி அடிப்படையில் மட்டுமே நேர்முகத் தேர்வு நடைபெற வேண்டும். இவ்வாறு பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இக்குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், சிவில் சர்வீஸ் தேர்வு நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்.