எஸ்.எஸ்.எல்.சி.: கணிதம், அறிவியலில் கடினப் பாடங்கள் நீக்கம் எப்போது?
இனிமேல் குழுவை நியமித்து, அவர்கள் கடினமான பகுதிகளை ஆராய்ந்து அவர்கள் தரும் பரிந்துரையின் அடிப்படையில் பாடப்பகுதிகளை நீக்கி அறிவிப்பதற்குள் நடப்புக் கல்வியாண்டு முடிந்துவிடும் என்று தெரிகிறது. எஸ்.எஸ்.எல்.சி., புதிய பாடத்திட்டத்தில் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்கள் விரிவாகவும் பல பகுதிகள் கடினமாகவும் இருப்பதாகவும் மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கடினமான பகுதிகளை ஆராய்ந்து நீக்க வேண்டிய பகுதிகள் குறித்து பரிந்துரை வழங்குவதற்காக குழு அமைக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக கண்ணன் பதவி வகித்த போது இந்த பரிந்துரை அனுப்பப்பட்டது. கண்ணனுக்கு பிறகு ஜெகந்நாதன் இயக்குநராக வந்தார். அவர் ஓய்வுக்குப் பிறகு தற்போது பெருமாள்சாமி பள்ளிக் கல்வி இயக்குநராக பதவி வகித்து வருகிறார். இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நடப்புக் கல்வியாண்டு துவங்கி மூன்று மாதங்கள் முடியப் போகிறது. செப்டம்பர் முதல் வாரத்திலிருந்து தனியார் பள்ளிகளிலும் செப்டம்பர் 15ம் தேதியிலிருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்தும் காலண்டு தேர்வுகள் நடைபெற உள்ளன. ஆனால் கடினமான பாடப்பகுதிகளை நீக்குவதற்காக இதுவரை குழுவே அமைக்கப்படவில்லை. இனி, குழுவை நியமித்து அவர்கள் ஆய்வுக்கூட்டங்களை நடத்தி கடிமான பாடப்பகுதிகளை நீக்குவதற்கு குறித்து அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். அதன் பிறகே, கடின பாடங்கள் நீக்கப்படும். இந்தப் பணிகள் நடந்து முடிவதற்குள் நடப்புக் கல்வியாண்டு முடிந்து விடும் என்று தெரிகிறது. குழுவே நியமிக்கப்படாமல் இருக்கும் விவரம் தெரியாமல் கணிதம், அறிவியல் பாடங்களில் நீக்கப்படும் பகுதிகள் விவரம் இன்று வெளிவருமா? நாளை வெளிவருமா என மாணவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.