கனடா நாட்டு கப்பல்கள் சென்னையில் நான்கு நாட்கள் முகாம்
கல்கேரி தாக்குதல் கப்பலாகவும், புரடெக்டர் ‘சப்ளை’ கப்பலாகவும் செயல்படுகிறது. கல்கேரி கப்பலில் போபர்ஸ் பீரங்கி, தாக்குதல் ஏவுகணைகள், எதிரிகளின் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் மற்றும் ஹெலிகாப்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. கல்கேரி கப்பலில் அதிகாரிகள், வீரர்கள் உட்பட 224 பேரும், புரடெக்டர் கப்பலில் அதிகாரிகள், வீரர்கள் உட்பட 296 பேரும் உள்ளனர். அரபிக் கடலில் பல்வேறு நாடுகளுடன் இணைந்து தீவிரவாத எதிர்ப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இக்கப்பல்கள், தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்பும் வழியில் பல்வேறு நாடுகளுக்குச் செல்கின்றன. இப்பயணத்தின் முதலாவது நாடாக இக்கப்பல்கள் இந்தியாவிற்கு (சென்னை) வந்துள்ளன. சென்னை நகரில் உள்ள பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், புத்தகங்கள், ஆய்வக உபகரணங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு நன்கொடை அளிக்க உள்ளனர். சென்னை துறைமுகத்தில் இக்கப்பல்கள் நான்கு நாட்கள் தங்கியிருக்கின்றன; வருகிற 13ம் தேதி சென்னை துறைமுகத்திலிருந்து புறப்படுகின்றன. கப்பலில் நிருபர்களுக்குப் பேட்டியளித்த கல்கேரி கப்பலின் கேப்டன் கெல்லி லார்கின், புரடெக்டர் கப்பலின் கேப்டன் சீன் கேண்டலான் ஆகியோர் கூறியதாவது: ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தல், ஆள்கடத்தல் ஆகிய பணிகளை முறியடிக்கும் பணிகளிலும் ஈடுபட்டிருந்தோம். நான்கு நாட்களுக்கு முன் அரபிக் கடலில் எங்களது பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது சென்னை வந்திருக்கிறோம். இரண்டு கப்பல்களிலும் தலா 50 வீரர்கள் வீதம் மொத்தம் 100 வீரர்கள் சென்னையில் தன்னார்வப் பணிகளில் ஈடுபடவுள்ளனர். இவர்கள் மணித்தோட்டத்தில் உள்ள செர்வசேவ் வித்யாலயா பள்ளியில் கட்டடம் கட்டுவது, கட்டடங்களுக்கு வண்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகின்றனர். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில், மழைநீர் சேகரிப்பு தொடர்பான பணிகளிலும் ஈடுபடுகின்றனர். இரண்டு கப்பல்களும், வருகிற 13ம் தேதி இந்தியக் கடற்படையுடன் இணைந்து சில பயிற்சிகளில் ஈடுபடுகிறோம். இதைத்தொடர்ந்து 13ம் தேதி சென்னை துறைமுகத்திலிருந்து கிளம்புகிறோம். உலகம் முழுவதும் 15 நாடுகளுக்குச் செல்லவும், அக்டோபர் 24ம் தேதி கனடா சென்றடையவும் திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். சென்னையை அடுத்து, இக்கப்பல்கள் தாய்லாந்து, மலேசியா, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செல்கின்றன.