சிறை கைதிகளுக்குப் படிக்கக் கட்டணம் ரத்து: இக்னோ திட்டம்
இதுகுறித்து செப்டம்பர் 17ம் தேதி நடைபெறும் பல்கலைக்கழக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகளுடன் பல்கலைக்கழகம் கலந்து பேசும் என்றும் கூறப்படுகிறது. படிக்க விரும்பும் சிறைக் கைதிகள் குறித்த விவரங்களை அளிக்கும்படி சிறைத் துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக இந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என். ராஜசேகரன் பிள்ளை தெரிவித்தார். சிறைக் கைதிகளுக்கு கட்டணத்தை ரத்து செய்வது குறித்து கொள்கை அளவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கு ஆகும் கட்டணத் தொகையை மாநில அரசுகளிடமிருந்து மானியமாகப் பெறுவதற்கான சாத்தியங்களும் ஆராயப்படுகின்றன என்றார். சிறையில் இருக்கும் கைதிகள் கம்ப்யூட்டர் பயிற்சி பெறுவதற்கு கட்டண விலக்கு அளிக்க பல்கலைக்கழகம் முன்வந்தது. தற்போது அனைத்துப் பாடங்களுக்கும் இந்தச் சலுகை விரிவுபடுத்தப்படுகிறது என்று ராஜசேகரன் பிள்ளை மேலும் தெரிவித்தார். பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு உயர்கல்வி பெற விரும்பும் சிறைக் கைதிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும். தற்போது தமிழகச் சிறையில் உள்ள 940 பேர் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் படித்து வருகின்றனர். இதுதவிர, பலர் தொடர்கல்வித் திட்டத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர் என்று சிறைத் துறை டைரக்டர் ஜெனரல் ஆர். நடராஜ் தெரிவித்தார். அனைத்து சிறைகளிலும் இக்னோ விரிவாக்க மையங்களை அமைப்பதற்கு உரிய இடங்களையும் தேவையான வசதிகளையும் செய்து தரத் தயாராக இருக்கிறோம். தற்போது சிறைகளில் தண்டனை கைதிகளாக இருக்கும் 6 ஆயிரம் பேரில் 50 சதவீதம் பேரை இந்தப் படிப்புத் திட்டங்களில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.