விளையாட்டு அரங்கில் தேங்கியுள்ள மழை நீர்: வீரர்கள் தவிப்பு
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சிபெற முடியாமல் தவிக்கின்றனர். சிவகங்கையில் விளையாட்டு வீரர்கள் பல்வேறு பயிற்சிகளை பெறும் நோக்கில், மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அரசு மாவட்ட விளையாட்டு அரங்கை ஏற்படுத்தியது. இதில், கூடைப்பந்து, கால்பந்து, டென்னீஸ், ஹாக்கி ஆகிய விளையாட்டுக்களுக்கான திடல்களை அமைத்துள்ளது. இதுதவிர, நீச்சல் பயிற்சி பெறுபவர்களுக்கென நீச்சல் குளமும் அமைத்துள்ளனர். மழை நீர் தேக்கம்: மழை நீர் விளையாட்டு திடலை விட்டு வெளியேறும் வகையில் கால்வாய் இருந்தாலும், அவை முட்புதர் மண்டிக் கிடக்கிறது. கழிவுநீர் செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை நீர் வெளியேற வழியின்றி, கால்பந்து மைதானத்தில் குளம்போல் தேங்கி கிடக்கின்றன. காலை, மாலை நேரங்களில் விளையாட்டு வீரர்கள் விளையாட முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். மாவட்ட நிர்வாகம், மழை நீர் எளிதில் விளையாட்டு திடலை விட்டு வெளியேறும் வகையில், கழிவு கால்வாய்களை செப்பனிட வேண்டும் என, விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.