காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, பீர்க்கங்காரணை அரசு மேல்நிலைப் பள்ளியில் விற்பனை
காஞ்சிபுரம்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுக்கான வினா - விடை புத்தகங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, பீர்க்கங்காரணை அரசு மேல்நிலைப் பள்ளியில் விற்பனை செய்யப்பட உள்ளன. பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த, மாநில பெற்றோர் - ஆசிரியர் கழகம், பொதுத்தேர்வுக்கான வினா - விடை புத்தகங்களை, பாட ஆசிரியர்கள் குழு மூலம் தயாரித்து, குறைந்த விலைக்கு ஆண்டுதோறும் விற்பனை செய்கிறது. இந்த விற்பனை, சென்னையில் மட்டும் நடந்து வந்தது. மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோர், வினா - விடை புத்தகங்களை வாங்க, சென்னை வரவேண்டிய நிலை இருந்தது. இதை தவிர்க்க, அனைத்து மாவட்டங்களிலும் புத்தகங்களை விற்பனை செய்ய வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், 32 மாவட்டங்களிலும், வினா - விடை புத்தகங்களை விற்பனை செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், கடந்த மாதம் உத்தரவிட்டார். அதன்படி, வரும் 10ம் தேதி முதல், அனைத்து மாவட்டங்களிலும், 10ம் மற்றும் பிளஸ் 2, வினா - விடை புத்தகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, பீர்க்கங்காரணை அரசு மேல்நிலைப் பள்ளியில் விற்பனை செய்யவுள்ளதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த பள்ளி, சென்னை மாநகராட்சிக்குள் உள்ளதால், காஞ்சிபுரம் அல்லது செங்கல்பட்டு ஆகிய பகுதியில் உள்ள பள்ளிகளில், வினா - விடை புத்தகம் விற்பனை செய்ய வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.