உள்ளூர் செய்திகள்

மாநில சைக்கிள் போட்டியில் அன்னூர் மாணவர்கள் தனிநபர் சாம்பியன்

அன்னுார்: மாநில அளவிலான சைக்கிள் போட்டியில், அன்னுார் மாணவ, மாணவியர் நான்கு பேர் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர். கோவை மாவட்ட சைக்கிள் சங்கம் சார்பில், கடந்த மாதம் நடந்த சைக்கிள் போட்டியில் முதல் இடம் பெற்றவர்கள், காரைக்குடி, அழகப்பா பல்கலையில் நடந்த மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் பங்கேற்றனர். தமிழ்நாடு சைக்கிள் சங்கம் இப்போட்டியை நடத்தியது. இதில், அன்னுார் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த நான்கு பேர் சாம்பியன் பட்டம் வென்றனர். 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில், மாணவி பவித்ராஸ்ரீ, 800 மீட்டர் போட்டியில் முதலிடம் பெற்று எட்டு புள்ளிகளுடன் தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றார். 14 வயது பிரிவில் மாணவர் சோயப் அக்தர் 400 மீட்டர் மற்றும் 1,600 மீட்டர் போட்டிகளில் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். 16 வயது பிரிவில், மாணவி தாரணி 800 மீட்டர், 1,200 மீட்டர் மற்றும் 1,600 மீட்டர் போட்டிகளில் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அதே பிரிவில், மாணவி ஸ்ரீநிவேதா இரண்டாம் இடம் வென்றார். 18 வயது பிரிவில் 800 மீட்டர், 2,000 மீட்டர் பிரிவுகளில் நந்தினி முதலிடம் பெற்று, சாம்பியன் பட்டம் வென்றார். 14 வயது 10 கி.மீ., ரோடு சைக்கிளிங் போட்டியில், பவித்ராஸ்ரீ முதலிடமும், சுகன்யா மூன்றாமிடமும் பெற்றனர். 15 கி.மீ., ரோடு சைக்கிளிங்கில், நந்தினி முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், உடற்கல்வி ஆசிரியர்கள் விக்னேஷ், குருசாமி ஆகியோருக்கு பள்ளி முதல்வர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்