ஆராய்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ள மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி
மதுரை: சென்னைக்கு அடுத்து சிறந்து விளங்கும் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி, ஆராய்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளது. கல்லுாரியில் உடற்செயலியல், அனாடமி, மைக்ரோபயாலஜி, நோயியல், தொடர்பியல் மருத்துவத் துறைகள் ஆராய்ச்சி தொடர்பாக உள்ளன. கல்லுாரியோடு தொடர்புடைய மருத்துவமனையில் குழந்தைகள் நலத்துறை, மயக்கவியல் மற்றும் மனநலத் துறைகள் இன்ஸ்டிடியூட் ஆக செயல்படுகின்றன. இன்ஸ்டிடியூட் ஆக இருக்கும் பட்சத்தில் ஆராய்ச்சியில் கண்டிப்பாக ஈடுபட வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் கல்லுாரியிலிருந்து சொல்லிக் கொள்ளும்படியான ஆராய்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை. ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பல்கலை மானியக் குழு மற்றும் பல்கலை ஆராய்ச்சிக்கான நிதி இருக்கிறது. முதுநிலை மாணவர்கள் பரிசோதனை தொடர்பான ஆய்வு முடிவுகளை பாடரீதியாக சொந்த செலவில் சமர்ப்பிக்கின்றனர். சிலநேரங்களில் இந்த ஆய்வுகள் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாலும் அவை முறையாக மருத்துவ இதழை சென்றடைவதில்லை. டாக்டர்களும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மட்டுமே தங்களது நேரத்தை செலவிடுகின்றனர்.சிகிச்சையில் கண்டறிந்த சில முக்கிய ஆய்வுகளை அவ்வப்போது தொகுத்து வந்தாலே அவற்றை கட்டுரையாக வெளியிட்டு அரசுக்கு தகவல் தெரிவிக்கலாம். இன்ஸ்டிடியூட்டாக இல்லாவிட்டாலும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும். இங்கு சென்னை மருத்துவக் கல்லுாரிக்கு இணையான அளவில் மகப்பேறு, சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிக்கலான பிரசவங்களை கடைசி நேரத்தில் கையாள்வதால், இறப்பும் இங்கு அதிகரிக்கிறது. இதையெல்லாம் ஆவணமாக பதிவுசெய்து ஆராய்ச்சி செய்யலாம். தொடர் ஆராய்ச்சி செய்யும்போதுதான், டாக்டர்கள் அத்துறையில் புத்துணர்வு பெற முடியும். மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் ஆய்வு டாக்டர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.