தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி திருப்பூரில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
திருப்பூர்: ஹெவி மெட்டல் மோதிரம் அணிவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து, தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, திருப்பூரில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கடைகளில் 10 ரூபாய்க்கு கிடைக்கும் ஹெவி மெட்டல் மோதிரங்களை அணியும்போது ஏற்படும் பாதிப்பால், விரலில் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. கை விரல்களில் அடிபடும்போதும், இடைஞ்சலான இடங்களில் மோதிரத்தால் கைவிரல் மாட்டிக்கொள்கிறது. இதில் விரல் சேதமடைந்தாலும் மோதிரத்தை கழற்ற முடிவதில்லை. இந்த மெட்டல் மோதிரம் அணிந்த கோவை மாணவர்கள் சிலர் கை விரல்களை இழந்தது குறித்து, 8ம் தேதி, தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இச்செய்தியை, பிளக்ஸ் பேனரில் பிரதியெடுத்து திருப்பூர் கே.எஸ்.சி., பள்ளி வளாகத்தில் பார்வைக்கு வைத்துள்ளனர். இதை பள்ளி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் படித்து செல்கின்றனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தங்கவேல் கூறுகையில், "மெட்டல் மோதிரம் குறித்த இச்செய்தியால், தங்கள் பிள்ளைகளை பெற்றோர் எச்சரிக்க வாய்ப்புள்ளது. இதை படித்த பிற பள்ளிகளின் ஆசிரியர்களும், தங்கள் மாணவர்கள் மெட்டல் மோதிரங்களை அணியாமல் தடுக்க, நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர்" என்றார்.