பள்ளியை தரம் உயர்த்த கோரி வகுப்பை புறக்கணித்த மாணவர்கள்
சோழவரம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்த கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வெளியேறினர். சோழவரம் அருகே உள்ளது ஆத்தூர் கிராமம். இங்கு கடந்த 1962ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. அதன்பின் 1999ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இந்த நடுநிலைப்பள்ளியில் ஆத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள தேவனேரி, பெரியார் நகர், பெஸ்தபாளையம், அம்பேத்கர் நகர், காவாய்மேடு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 431 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். மேற்கண்ட பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 8ம் வகுப்பு முடித்து 9ம் வகுப்புக்கு மேல் படிக்க சோழவரம் சென்று வருகின்றனர். இவர்கள் சோழவரம் செல்ல சென்னைகோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டியுள்ளது. இதனால், விபத்து ஏற்படும் ஆபத்தான சூழலில் பள்ளி சென்று வருகின்றனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி, ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தர உயர்த்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக கிராம மக்கள் சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகிறது. பள்ளி மூலமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் தரம் உயர்த்துவதற்கான விண்ணப்ப மனுவுடன் அதற்குண்டான பணமும் கிராம மக்கள் செலுத்தினர். ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பொறுமையிழந்த கிராம மக்கள், தங்கள் பிள்ளைகள் மூலம் பள்ளியை புறக்கணிக்க முடிவு செய்தனர். அதன்படி ஜூன் 29ம் தேதி காலை பள்ளிக்கு சென்ற மாணவர்கள் பள்ளி தொடங்கும் முன் அனைவரும் பள்ளியைவிட்டு வெளியேறினர். வெளியேறிய மாணவர்கள் சாலை ஓரமாக பள்ளி முன் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பின்னர் வீட்டிற்கு சென்றனர். தகவலறிந்த துணை கல்வி அலுவலர் ஏகாம்பரம், பள்ளிக்கு நேரில் வந்திருந்தார். ஊராட்சி தலைவர் பூங்கொடி சற்குணன் மற்றும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ‘எங்கள் கிராமத்து பள்ளியை தரம் உயர்த்த வேண்டும், அதற்கான ஒப்புதலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளிக்கவேண்டும். அதுவரை எங்கள் பிள்ளைகள் வகுப்புகளை புறக்கணிப்பர்’ என்று துணை கல்வி அலுவலரிடம், கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.