உலக ஆயுர்வேத விழாவில் பரிசு வென்ற கோவை மாணவி
தொண்டாமுத்துார்: திருவனந்தபுரத்தில் நடந்த உலக ஆயுர்வேத விழாவில், கோவை ஈஷா சமஸ்கிருதி முன்னாள் மாணவி சிறந்த படைப்பிற்கான பரிசு பெற்றார்.இந்திய மருத்துவ ஞானத்தை கொண்டாடும் வகையில், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், உலக ஆயுர்வேத விழா நடந்தது. இவ்விழாவில், 50 நாடுகளில் இருந்து, 6,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், ஈஷா சமஸ்கிருதி முன்னாள் மாணவர்களான ருஷ்மிதா, தேஜஸ் ஆகியோர் தங்களின் படைப்புகளை வழங்கினர்.இதில், ருஷ்மிதாவின், சித்த நாடி பரிக்-ஷா என்ற படைப்பு, சம்ஹிதா மற்றும் சித்தாந்தா என்ற பிரிவில் முதல் பரிசு பெற்றது. இது மொத்தமாக பங்கேற்ற, 771 படைப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 16 படைப்புகளில் ஒன்றாக இடம்பெற்றது.அதேபோல, இதில் கலந்துகொண்ட ஈஷா சமஸ்கிருதி முன்னாள் மாணவர் தேஜஸ், கடந்த ஏப்ரலில், போபாலில் நடந்த தேசிய கருத்தரங்கில் இரண்டாம் பரிசை பெற்றுள்ளார்.