மாணவர்கள் நடவடிக்கை வேதனையாக உள்ளது: கல்வி அதிகாரி புலம்பல்
வடமதுரை: அரசு பள்ளிகளில் சில மாணவர்களது நடவடிக்கைகளை பார்க்கும் போது வேதனையாக உள்ளதாக வட்டார கல்வி அலுவலர் நல்லுச்சாமி பேசினார்.வடமதுரை ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் அவர் பேசியதாவது: கிராமங்களில் மாணவர்கள் அதிக நாட்கள் விடுமுறை எடுக்கின்றனர். இதனால் அவர்களின் கல்வித்தரம் குறைகிறது. இடைநிற்றலும் அதிகமாக உள்ளது. பள்ளிகளில் குடிநீர் குழாய், பைப் லைன் உள்ளிட்ட உபகரணங்களை சேதமாக்கும் மாணவர்களும் உள்ளனர். வடமதுரையில் ஒன்றிய கலைவிழா போட்டி நடந்தபோது சில மாணவர்கள் மது அருந்திவிட்டு வந்திருந்தனர்.அய்யலுார் அருகில் ஒரு கிராம பள்ளியில் ஆய்வுக்கு சென்றபோது டூவீலரில் இரு மாணவர்கள் வேகமாக பள்ளிக்குள் வந்தனர். அவர்களிடம் கேட்டபோது அலட்சியமாக பதில் சொன்னார்கள். சில ஊர்களில் மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் கண்டிப்பு காட்டியபோது தவறான முடிவு செய்து உயிரை மாய்க்கும் திசையில் சென்ற சம்பவங்கள் நடந்துள்ளன.அதன் பழி ஆசிரியர்கள் மீது திரும்பின. இதனால் ஆசிரியர்கள் ஒரு அளவிற்கு மேல் மாணவர்களிடம் கண்டிப்பு காட்ட தயங்குகின்றனர். ஒன்றிய கவுன்சிலர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுடன் சேர்ந்து பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தங்களது குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கே அதிகம் உள்ளது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.தலைவர் தனலட்சுமி தலைமை வகித்தார். பி.டி.ஒ., கீதாராணி, ஏ.பி.டி.ஓ., ஏழுமலையான் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் தரப்பில் வேல்வார்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. அகற்றப்பட்ட மேல்நிலை தொட்டி பதிலாக விரைவில் புதிய தொட்டி வேண்டும். எஸ்.குரும்பபட்டி, மலைப்பட்டி கிராமங்களில் வாடகை கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையங்களுக்கு கட்டட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தினர்.