புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்களில் அதிகாரிகள் ஆய்வு
திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் வாயிலாக, அடிப்படை கல்வி கற்றுத்தர, 96 மையங்கள் செயல்படுகின்றன.நடப்பாண்டு, அக்டோபர் மாதம் துவங்கி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை, 6 மாதங்களுக்கு நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வீதம், 6 மாதங்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு வகுப்புகள் நடக்கின்றன.திருப்போரூர் ஒன்றியம், செம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெறும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையத்தில், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் துறையின் இயக்குனர் பழனிசாமி, இணை இயக்குனர் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் மாவட்ட திட்ட அலுவலர் ஜெயகுமார், வட்டார கல்வி அலுவலர் சிவசங்கரன், பள்ளி தலைமையாசிரியர் மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆய்வில், கல்வி கற்போரிடம், பெயர் எழுதுதல், எண்கள் எழுதுதல், பொருட்களுக்கு ஏற்ப எண்களை எண்ணி சொல்லுதல் குறித்து கேட்டறிந்து, மேலும் கற்றுக்கொள்ள ஊக்குவித்தனர்.தொடர்ந்து, இயக்குனர் அடைவுத்திறன் மதிப்பீட்டில் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும். இதற்கான தினசரி வகுப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என, ஊக்கமளித்தார்.மையத்தில் பயிற்சி வழங்கிவரும் தன்னார்வலர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களை, பயிற்சி புத்தகத்தில் உள்ள அனைத்து பாடங்களையும் முழுமையாக கற்றுத்தரும்படி ஆலோசனை வழங்கினர். நிறைவில், கண் பரிசோதனை செய்து கண்ணாடி வழங்க, கண் மருத்துவ முகாம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, அதிகாரிகளுக்கு இயக்குனர் உத்தரவிட்டார்.