ஒரு நாள் போலீஸ் அதிகாரி சிறுவன் ஆசை நிறைவேற்றம்
பெங்களூரு: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் போலீஸ் ஆசையை, தெற்கு மண்டல போலீசார் நிறைவேற்றி வைத்தனர்.புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மல்லிகார்ஜுன், 10, என்ற சிறுவன், பெங்களூரு கித்வாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். அவனிடம், &'உன் ஆசை என்ன?&' என, டாக்டர்கள் கேட்டனர். வளர்ந்து பெரியவன் ஆனதும், ஐ.பி.எஸ்., அதிகாரி ஆக வேண்டும் என மல்லிகார்ஜுன் கூறினான்.அவனது ஆசையை நிறைவேற்றுவதற்காக, பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சைதுல் அதவாத்திடம், கித்வாய் மருத்துவமனை டாக்டர்கள் பேசி இருந்தனர். சிறுவன் மல்லிகார்ஜுனனை ஒரு நாள் போலீஸ் அதிகாரி ஆக பணியாற்ற, அவரும் சம்மதம் தெரிவித்தார்.இதையடுத்து ஜெயநகரில் உள்ள தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று காலை சிறுவன் மல்லிகார்ஜுன் அழைத்துச் செல்லப்பட்டான்.அங்கு துணை போலீஸ் கமிஷனராக, மல்லிகார்ஜுன் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். சீருடை, தொப்பி அணிந்து மிடுக்காக காணப்பட்ட மல்லிகார்ஜுன், போலீஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடினான். மாலையில் மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்றான். இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளது.