உள்ளூர் செய்திகள்

பள்ளியை சுத்தம் செய்த மாணவர்கள்; பெற்றோர் கடும் கோபம்

கோலார்: கோலாரில் அரசு பள்ளியின் வளாகத்தை பள்ளி மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ மீண்டும் பரவியதால், சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.கோலார் மாவட்டத்தில் கடந்தாண்டு டிசம்பரில், மொரார்ஜி தேசாய் உறைவிடப்பள்ளி வளாகத்தை, விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் சுத்தம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதால், பள்ளி முதல்வர் மீது கல்வி துறை நடவடிக்கை எடுத்தது.தற்போது, கோலாரில் அரசு பள்ளி மாணவர்கள், பள்ளி வளாகத்தில் உள்ள சுவரை இடிப்பது, கற்கள், மண்ணை அள்ளிச் செல்லும் வீடியோ பரவியது.இப்பள்ளி, கோலார் கல்வி துறை இணை இயக்குனர் அலுவலகம் அருகில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் தினமும் படிப்பதை விடுத்து, கூலி வேலை செய்கின்றனர். வேலை செய்யாவிட்டால், பள்ளி துணை முதல்வர் ராதம்மா அடிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தேர்வு நெருங்கும் நேரத்தில், மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதை விடுத்து, கட்டடங்களை இடிக்கவும், மண் அள்ளுவதற்கும் கூலியாட்கள் போன்று பயன்படுத்தி உள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர், மாநில விவசாயிகள் சங்க தலைவர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்