உள்ளூர் செய்திகள்

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் கையடக்க கணினி

காரைக்குடி: தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி எனும் டேப் வழங்கப்படும் நிலையில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள்மற்றும் தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள், இணையதள வசதியுடன் அமைப்பது குறித்தும், ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்குவது குறித்தும் சட்டமன்ற கூட்டத்தில் அறிவிப்பு வெளியானது. அதன் அடிப்படையில் அனைத்து அரசு நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி எனும் டேப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்குவது குறித்த எந்த தகவலும் இல்லை.டோம்னிக் ராஜ், தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர், அலுவலர் கூட்டமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர்: அரசு பள்ளியை போலவே அரசு உதவி பெறும் மாணவிகளுக்கும் சலுகை பெற வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறோம். அந்த முயற்சி பலனாகவே பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, பள்ளியில் காலை உணவு விரிவாக்கம் செய்துள்ளனர். கையடக்க கணினி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் வசதியானவர்கள் இல்லை. அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழி கல்வி மட்டுமே நடைபெறுவதால் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் மாணவர்களை பள்ளியில் சேர்த்து கற்பித்துக் கொடுக்கும் செயலில் ஈடுபடுத்தி வருகின்றனர். பாரபட்சமின்றி அரசு பள்ளி போல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கையடக்க கணினி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்