கல்லுாரி செல்லாத மாணவர்கள் கண்டறிய கலெக்டர் உத்தரவு
திருப்பூர்: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, உயர்கல்விக்கு செல்லாமல் உள்ள மாணவ, மாணவியரை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை உடனடியாக வழங்க வேண்டும்,' என, கலெக்டர் உத்தரவிட்டார்.பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு மே, 6ம் தேதி வெளி யானது. மாவட்டத்தில், 10 ஆயிரத்து, 810 மாணவர், 13 ஆயிரத்து, 39 மாணவியர் என மொத்தம், 23 ஆயிரத்து, 849 பேர் தேர்வெழுதியதில், 10 ஆயிரத்து, 440 மாணவர், 12 ஆயிரத்து, 802 மாணவியர் என, 23 ஆயிரத்து, 242 பேர் தேர்ச்சி பெற்றனர்.பிளஸ் 2 வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் உயர்கல்வி படிப்புகளில் இணைந்து விட்டனாரா என்பது குறித்து ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில், டி.ஆர்.ஓ., ஜெய்பீம், முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) பக்தவச்சலம் மற்றும் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:நிதி பற்றாக்குறை, குடும்பச்சூழல், உயர் கல்வி படிப்பில் ஆர்வமின்மை, தொழில் செய்தல், பெற்றோர்களின் அனுமதியின்மை மற்றும் அருகாமையில் கல்லுாரியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உயர்கல்விக்கு மாணவ, மாணவியர் விண்ணப்பிக்காமல் இருப்பது தெரிய வருகிறது.மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கு கல்வி சார்ந்த அலுவலர்கள் பங்களிப்பு முக்கியம். பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் அனைவரும் உயர்கல்விக்கு செல்ல வேண்டும். உயர்கல்விக்கு செல்லாதவர்களை கண்டறிந்து, அதற்கான காரணங்களை முழுமையாக அறிந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து வழிகாட்டுதல், உதவிகளை உடனடியாக செய்து தர வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.