ஏ.ஐ., தொழில்நுட்பத்தினை ஆக்கபூர்வமானதாக உருவாக்க மோடி வலியுறுத்தல்
பஷானோ: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமானதாக உருவாக்க வேண்டும் என ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு, இத்தாலியின் பஷானோ நகரில் உள்ள அபுலியாவில் நடக்கிறது. மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.மாநாட்டின் இடையே பல்வேறு நாட்டு தலைவர்களை சந்திப்பின் போது உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்னைகள் தொடர்பாக பேசினார்.பின்னர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது, ஜனநாயகத்தின் மிகப்பரெிய திருவிழாவாக இந்திய தேர்தல் உள்ளது. இத்தேர்தலில் மூன்றாவது முறையாக மக்களுக்கு சேவை செய்ய கிடைத்தது எனது அதிருஷ்டம் .இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நாம் ஆக்கப்பூர்வமாக உருவாக்க வேண்டும், அதே நேரம் அழிவுக்கு காரணமாக இருக்கக்கூடாது அப்போது தான் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்திற்கு அடித்தளம் அமைக்க முடியும்.கடந்த ஆண்டு இந்தியா நடத்திய ஜி20 மாநாட்டின் போது, செயற்கை நுண்ணறிவு துறையில் சர்வதேச அளவிலான முக்கியத்துவத்தை வலியுறுத்தினோம். செயற்கை நுண்ணறிவில் தேசிய திட்டத்தை வகுத்த சில நாடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் ஜி7 நாடுகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். இதில் போப் பிரான்சிசும் கலந்து கொண்டார்.