மாணவர் தொழில் முனைவோர் சந்தை தொழில்திறன் வெளிப்படுத்த தீவிரம்
உடுமலை: உடுமலையிலுள்ள அரசு மாதிரி பள்ளியில், மாணவர் தொழில் முனைவோர் சந்தை நடந்தது.திருப்பூர் மாவட்டத்துக்கான அரசு மாதிரி பள்ளி, உடுமலை ஆர்.கே.ஆர்., குருவித்யா பள்ளி வளாகத்தில் செயல்படுகிறது. இப்பள்ளியில் ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் படிக்கின்றனர்.மாணவர்களுக்கான தொழில் திறன்களை வளர்க்கும் வகையில், 'மாணவர் தொழில் முனைவோர் சந்தை,' நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. துவக்க விழாவில் தலைமையாசிரியர் சவுந்திரராஜன் வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உதயக்குமார் தலைமை வகித்தார்.ஆர்.கே.ஆர்., கல்வி குழும நிறுவனர் ராமசாமி முன்னிலை வகித்தார். உடுமலை தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனர் தமிழ்செல்வி தொழில் முனைவோராவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். மாதிரி பள்ளி தமிழாசிரியர் உமாமகேஸ்வரி வரவேற்றார்.தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மாணவர்கள் தங்களின் பொருட்களை சந்தைப்படுத்தினர். கம்மங்கூழ், குளிர்பானம், பழங்கள் உட்பட பல்வேறு உணவு பொருட்களை மாணவர்கள் தயாரித்து அவற்றை காட்சிப்படுத்தி விற்றனர். புத்தகக் கடை, அலங்கார பொருட்கள், கைகளில் பின்னப்பட்ட கூடைகள், கைவினைப்பொருட்கள், மசாலா பொருட்கள் விற்பனை, செடிகள், மரக்கன்று நாற்றுகள் உள்ளிட்ட அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.இது தவிர, விளையாட்டு போட்டிகள், மேஜிக் ேஷா உள்ளிட்டவற்றையும் மாணவர்களாக ஒருங்கிணைத்து நடத்தினர். மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் சந்தையை பார்வையிட்டனர்.