தொழில்நுட்பங்களை சரியாக பயன்படுத்த தெரிய வேண்டும்: சுதா சேஷய்யன்
மதுரை: மனித உறவுகள் பரிமாற்றத்தை பாதிக்காத வகையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்த தெரிய வேண்டும் என மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.இப்பல்கலை 56-வது பட்டமளிப்பு விழா கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் நடந்தது. இதில் சுதா சேஷய்யன் பேசியதாவது:பட்டம் பெறுவது மட்டும் மாணவர்களுக்கு இலக்காக இருக்க கூடாது. தொடர்ந்து படிக்க வேண்டும். கல்வி என்பது தகவல்களை சேகரித்து அறிவை மேம்படுத்துவது மட்டுமல்ல. வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கற்க வேண்டும். அனைத்து வகையிலும் மாற்றத்தை ஏற்படுத்துவது தான் கல்வி. அது நாம் சிந்தனைகளுக்கான ஒரு பாஸ்போர்ட்.தற்போது அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சி அதிரித்து விட்டன.ஏ.ஐ., மூலம் எழுதுவது, படிப்பது போன்ற புதுப்புது விஷயங்களை கண்டுபிடிக்கிறோம். அதனால் நமக்கு சவால்களும் அதிகரிக்கின்றன. தொழில்நுட்பங்களை ஜாக்கிரதையாக பயன்படுத்த தெரிய வேண்டும்.ஆற்றல் துறையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. கல்வியிலும் ஏராள தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. என்ன தான் தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் ஒரு கடிதத்தை கையால் எழுதும் போது கிடைக்கும் உணர்வு எலக்ட்ரானிக்ஸ் தொடர்புகளில் கிடைக்குமா. மனித உறவுகள், உணர்வுகள் பரிமாற்றம் குறைந்து வருகின்றன. அறிவுசார்ந்து கற்றலே நமது கலாசாரம். அதை ஊக்குவிக்கும் வகையில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் அமைய வேண்டும். இவ்வாறு பேசினார்.பல்கலை கன்வீனர் சுந்தரவல்லி, பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன், தேர்வாணையர் தர்மராஜ், சிண்டிகேட் உறுப்பினர்கள் தீனதயாளன், தவமணி கிறிஸ்டோபர், கண்ணன், மயில்வாகனன், கேத்தராஜ் பங்கேற்றனர். 353 பி.எச்டி., உட்பட 54,714 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன், கல்வித்துறை செயலாளர் கோபால் விழாவை புறக்கணித்தனர்.