பல்கலை., கல்லூரிகளில் காதல் பாடம்: சீனா புது ஐடியா
பீஜிங்: சீனாவில் தொடர்ந்து குழந்தைப் பிறப்பு குறைந்து வரும் சூழ்நிலையில், அதனை மாற்றுவதற்காக கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் காதல் பாடம் கற்றுக் கொடுக்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.ஒரு காலத்தில் உலகில் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருந்தது. பல்லாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி உள்ளது. தற்போது அந்நாட்டு மக்கள் தொகை 140 கோடியாக உள்ளது. தொடர்ந்து மக்கள் தொகை குறைந்து வருகிறது. அரசின் குடும்ப கட்டுப்பாடு நடவடிக்கைகள், வாழ்க்கைச் செலவுகள், சீர்குலைந்த குடும்ப நடைமுறைகள் காரணமாக, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், ஆண்டுதோறும் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைகிறது. இதனால், அங்கு முதியவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. அந்நாட்டில் கல்வி மற்றும் காதல் குறித்து சமநிலை பேணுவதற்கு நேரத்தை ஒதுக்க முடியாத காரணத்தினால் 57 சதவீதம் பேர் காதல் செய்ய விரும்பவில்லை எனக் கூறியுள்ளனர்.இதனை மாற்றி, குழந்தைப் பிறப்பை அதிகரிக்க சீன அரசு பலவிதமான புது முயற்சி எடுத்து வருகிறது. இதன்படி, திருமணம், காதல், குழந்தைப் பிறப்பு, குடும்பம் பற்றி நேர்மறையான செய்திகளை இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்க காதல் பாடத்தை அறிமுகம் செய்யும்படி பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளை அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.இது தொடர்பாக அந்நாட்டு நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது: குழந்தைப் பிறப்பை அதிகரிக்க கல்லூரி மாணவர்கள் பங்கு முக்கியம். ஆனால், திருமணம் மற்றும் காதல் பற்றிய பார்வையை அவர்கள் மாற்றி உள்ளனர். இதனால் காதல் மற்றும் திருமணக் கல்வி படிப்புகளை வழங்குவதற்கான பொறுப்பை பல்கலை மற்றும் கல்லூரிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் திருமணம் மற்றும் குழந்தைப் பேறு பற்றிய நேர்மறையான சூழ்நிலையை உருவாக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.