உள்ளூர் செய்திகள்

ககன்யான் திட்டப் பணிகள் விறுவிறுப்பு: வீரர்களை மீட்க ஒத்திகை

புதுடில்லி: ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதில் மும்முரமாக உள்ள இஸ்ரோ, விண்வெளிக்கு சென்று திரும்பும் வீரர்களை மீட்பது தொடர்பாக இந்திய கடற்படையுடன் இணைந்து ஒத்திகையில் ஈடுபட்டது.மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதில் இஸ்ரோ மும்முரமாக உள்ளது. பூமியிலிருந்து, 400 கி.மீ., தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2-3 விண்வெளி வீரர்களை அனுப்பி, அங்கு ஆய்வுப் பணிக்கு பின் பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது தான் ககன்யான் திட்டத்தின் நோக்கம். அடுத்தாண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.இத்திட்டத்தில் விமானப்படை குரூப் கேப்டன்கள் பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபன்சூ சுக்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி முடிந்து உள்ளது.இந்நிலையில் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு சென்று பூமிக்கு திரும்பும் வீரர்களை மீட்பது தொடர்பான ஒத்திகையில் இஸ்ரோ ஈடுபட்டது. இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியத்துடன் இணைந்து விசாகப்பட்டினத்தில் இந்த ஒத்திகை கடந்த 6ம் தேதி நடந்தது.கன்யான் திட்டத்தின்படி, ஆய்வுக்கு பிறகு, விண்வெளி வீரர்கள் பயணித்த விண்கலம் கடலில் விழும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. இதனை குறைந்த நேரத்தில், வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீட்பது குறித்து ஒத்திகை செய்து பார்க்கப்பட்டது.இதன்படிமுதலாவதாக விண்கலத்தை மீட்பது, அதை கப்பலின் வெல் டெக் பகுதிக்குள் கொண்டு வருவது, அடுத்து விண்கலத்தை நிலைநிறுத்துவது, வெல் டெக் பகுதியில் இருந்து தண்ணீரை வடியவைப்பது, வீரர்களை மீட்பது ஆகியவை செய்து பார்க்கப்பட்டன.இஸ்ரோ மற்றும் இந்திய கடற்படை இணைந்து செய்து வரும், சோதனைகளின் ஒரு பகுதியாக அமைந்த இந்த ஒத்திகை, ககன்யான் திட்டம் தொடர்பான நடைமுறைகளை உறுதி செய்யும் வகையில் அமைந்ததாக இஸ்ரோ கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்