அரசு மருத்துவக்கல்லுாரிகளில் பராமரிப்பு பணிகள் மந்தம்; பொதுப்பணித்துறையினர் அலட்சியம்
விருதுநகர்: தமிழகத்திலுள்ள புதிய அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் நிர்வாகம் கூறும் பராமரிப்பு பணிகளை செய்வதற்கு நிதி வழங்கியும் பொதுப்பணித்துறையினர் காலதாமதம் செய்வதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் மருத்துவமனைகளில் அன்றாட பணிகளில் பாதிப்பு ஏற்படுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.தமிழகத்தில் புதிதாக 11 அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள் 2022 ஜன., 12ல் திறக்கப்பட்டது. இவற்றில் தற்போது நான்காம் ஆண்டு மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு அடுத்தகட்டமாக முதுநிலை மருத்துவப்படிப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளது.இவற்றின் கட்டட பராமரிப்பு, மருத்துவமனையில் ஆங்காங்கே ஏற்படும் பழுதுகள், புதிய குடிநீர் திட்டப்பணிகள், மைதானம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பொதுப்பணித்துறையினரால் மேற்கொள்ளப்படுகிறது.பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்கு நிதியும் மருத்துவமனை நிர்வாகங்களால் பொதுப்பணித்துறையினருக்கு அவ்வவ்போது வழங்கப்படுகிறது. ஆனால் மருத்துவமனை நிர்வாகங்கள் கூறும் பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்காமல் பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகின்றனர்.இதுகுறித்து அத்துறை உயரதிகாரிகளிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் கேட்கும் போது எல்லாம் பணிகளை விரைந்து முடித்து விடுகிறோம் என மட்டுமே பதிலளிக்கின்றனர். ஆனால் அவர்கள் குறிப்பிடும்படி பணிகளை செய்வதில்லை. சில மாதங்களாக மருத்துவமனை கட்டட பராமரிப்பு பணிகள் பெயரளவில் நடப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.