கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மாறுதல் கலந்தாய்வு
மதுரை: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையில் உள்ள, கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு பின் மதுரையில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நேற்று துவங்கியது.மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், 302 பள்ளிகளில், 1,700க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். 52 விடுதிகளில், 60க்கும் மேற்பட்ட காப்பாளர்கள் உள்ளனர். பள்ளிக்கல்வித்துறை போல, ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், நிர்வாக காரணங்களுக்காக 2022க்கு பின் கலந்தாய்வு நடத்தவில்லை.இந்நிலையில், இந்தாண்டு கலந்தாய்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு கல்வித்துறையின், எமிஸ் செயலி மூலம் விண்ணப்பிக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி, 450க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். அதன்படி நடு, உயர், மேல்நிலை தலைமையாசிரியர், பி.ஜி., கணினி பயிற்றுன், விடுதி காப்பாளர்களுக்கு நேற்று முதல்முறையாக ஆன்லைனில் கலந்தாய்வு நடந்தது.சிறப்பாசிரியர், இடைநிலை ஆசிரியர்களுக்கு இன்று நடக்கிறது. மாறுதல் பெற்ற, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், காப்பாளர்களுக்கு இணை இயக்குநர் முனுசாமி சான்றிதழ் வழங்கினார். ஆசிரியர்கள் கூறுகையில், சென்னைக்கு வர வேண்டும் என அலைக்கழிக்காமல் மதுரையில் நடத்துவது வரவேற்கத்தக்கது என்றனர்.