அரசு பள்ளி மாணவர்களுக்காக விரைவில் யு-டியூப் சேனல்
ஷிவமொக்கா: அரசுப் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில், விரைவில் கல்விக்காக யு-டியூப் சேனல் துவக்கப்படும் என மாநில துவக்கக் கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.ஷிவமொக்காவில் நேற்று அவர் அளித்த பேட்டி:அரசுப் பள்ளிகளுடன், தனியார் பள்ளிகளை ஒப்பிடுவது சரியல்ல. அரசு உதவி பெறும் பள்ளிகளை விட, அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர்.அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் விரைவில் யு-டியூப் சேனல் துவங்க உள்ளோம். இதில், தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ - மாணவியர் எவ்வாறு தேர்வுக்கு தயாராகினர்; அவர்களின் ஆலோசனைகள், சிறந்த ஆசிரியர்களின் பாடங்கள் பற்றிய வீடியோக்கள் ஒளிபரப்பப்படும்.அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த, எல்.கே.ஜி.,க்கு ஒரு பிரிவு; ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை ஒரு பிரிவு, ஆறு முதல் ஏழாம் வகுப்பு வரை ஒரு பிரிவு; எட்டாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஒரு பிரிவு என பிரிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் சில நேரங்களில் பேசும்போது ஆங்கிலம், கன்னடத்தை தவறாக உச்சரிக்கின்றனர். இதை சரி செய்ய பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.மத்திய அரசு, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த, 500 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியது சரியல்ல. நம் மாநிலத்தில் 165 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. எனவே கணக்கெடுப்புக்கு கூடுதலாக நிதியை ஒதுக்க வேண்டும்.நாட்டில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். முதலில் காந்தி வாழ்ந்த நாட்டில் அமைதியை நாட வேண்டும். தேவைப்பட்டால் இந்திராவை போன்று போராடி, புத்திமதி கற்பிக்க வேண்டும்.நாம் ஏதாவது சொன்னால், பா.ஜ.,வினர், எங்களை பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று கூறுவது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.